20.1.08
சோதனை மேல் சோதனை: பாடாய் படுத்துகிறது பங்குச் சந்தை
சோதனை மேல் சோதனை. பல முதலீட்டாளர்களின் நினைப்பே தற்போது இது தான். பங்குச் சந்தையில் எல்லாரும் பணம் பார்க்கிறார்களேநாமும் ஏன் முயற்சி செய்யக் கூடாது என்று சமீப காலத்தில் பலர் துணிந்து இறங்கி வந்தார்கள். கடந்த ஒரு வார சரிவு, அவர்களை நிலை குலைய வைத்துள்ளது. ஏற்றமும், இறக்கமும் நிறைந்தது தான் பங்குச் சந்தை. மேலேயே சென்று கொண்டிருந்ததால் பங்குச் சந்தையை பற்றிய ஆர்வம் இல்லாதவர்களுக்கெல்லாம் ஒரு ஆர்வத்தை தந்தது. அவர்களும் சந்தையில் என்ன இருக்கிறது என்று பார்த்து விடுவோமே என்ற நினைப்பில் பணத்துடன் வந்தார்கள். தற்போதைய சந்தையின் பயங்கர இறக்கம் பலருக்கு தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்துள்ளது. சரிவு என்னவோ 2,000 புள்ளிகள் வரை. ஆனால், முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு பெரிய அளவில் உள்ளது. பங்குச் சந்தை பற்றிய பல கட்டுரைகளில் படங்கள் வெளியிடுவார்கள். அதில், மரத்தில் பணம் காய்த்து தொங்கும். அது போல, பங்குச் சந்தையில் பணம் காய்க்கிறது என்று பலர் நினைத்திருக்கலாம். அது ஆசையை கிளப்பி விட்டிருக்கலாம். பங்குச் சந்தை பணம் காய்க்கும் மரமல்ல.வியாழன் காலை நன்றாகவே இருந்த பங்குச் சந்தை, மதியத்திற்கு மேல் கீழே இறங்கத் துவங்கியது. காரணம், ரிலையன்ஸ் ரிசல்ட் வந்தவுடன் சந்தை இறங்கத் தொடங்கியது. உலகளவில் ஏற்பட்ட தொய்வும் ஒரு காரணம். சந்தை 167 புள்ளிகள் வரை குறைந்தது. வெள்ளியன்று ஆசிய அளவில் சந்தைகள் மேலேயே இருந்தாலும், இந்தியாவில் தொடக்கமே கீழே தான் இருந்தது. இந்த துறை தான் என்று இல்லை. எல்லா துறைகளும் கீழே விழுந்தன. `விழுந்தது' பங்குச் சந்தை. ஆனால், நல்ல அடி முதலீட்டாளர்களுக்கு. காலையில் இருந்து பெரிய அளவில் ஏதும் நடக்கவில்லை. ஒரு மந்தமான, அதே சமயம் சந்தை கீழேயே இருந்தது. கடைசி இரண்டு மணி நேரத்தில் இறங்கிய இறக்கம் எப்படி இருந்தது என்றால், தீம் பார்க்கில் பெரிய சறுக்கில் நாம் இறங்கும் வேகம் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு இருந்தது. 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. குறிப்பாக, கட்டுமானத்துறை, ஆயில், வாயு, வங்கித் துறை ஆகியவை பெரிய சரிவை சந்தித்தன. முடிவாக, மும்பை பங்குச் சந்தை 687 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது. இந்த 2,000 புள்ளிகள் மேல் ஏற்பட்ட சரிவு, நீண்ட கால முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு வாய்ப்பாகும். வெள்ளியன்று இறுதியில் மும்பை பங்குச் சந்தை 19,013 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 5,705 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. புதிய வெளியீடுகள்: ரிலையன்ஸ் பவர் க்ரே மார்க்கெட் பிரீமியம் ரூ.300 வரை உள்ளது. பிரீமியம் குறைந்து கொண்டே வருகிறது. காரணம், எல்லாரும் விற்க முற்படுவது தான். இன்னும் பிரீமியம் குறையும் வாய்ப்பு உள்ளது. மொத்தம் 72 தடவை செலுத்தப் பட்டுள்ளது. சிறிய முதலீட்டாளர்கள் பங்கு 15 தடவை வரை செலுத்தப்பட்டுள்ளது. முழுவதும் போட்டவர்களுக்கு 15 பங்குகள் கிடைக்கும் வாய்ப்புகள் கிட்டத்தட்ட உள்ளது. ரூ.200 பிரீமியம் கிடைக்கும் என்றால், 15 பங்கிற்கு ரூ.3,000 வரை லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. அதாவது, 25,000 ரூபாய் முதலீட்டிற்கு 20 நாட்களில் 3,000 ரூபாய் லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சிறிய முதலீட்டாளர்களில் நிறைய பேர் விற்பவர்களாக இருப்பதால், விலை சந்தையில் பட்டியலிடப் போகும் அன்று குறையலாம். எவ்வளவு பேர் வாங்க காத்திருக்கின்றனர் என்பதை பொறுத்தே உள்ளது. ப்யூச்சர் கேபிடல் சிறிய முதலீட்டாளர்களின் பங்கு 55 மடங்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆதலால், முழுவதும் போட்டவர்களுக்கு கிட்டத்தட்ட நான்கில் ஒருவருக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எம்.ஆர்.எம்.ஜி.எப்., வெளியீட்டிற்கு க்ரே மார்க்கெட் பிரீமியம் 350 ரூபாய் வரையில் உள்ளது. எம்.ஆர்.எம்.ஜி.எப்., அப்ளை செய்ய ரிலையன்ஸ், ப்யூச்சர் கேபிடல் பணங்கள் திரும்பி வந்து விடும். எம்.ஆருக்கு முன்னதாகவே ஓம் மொபைல் வெளியீடு வருகிறது. ஓம் மொபைல் கம்பெனி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மொபைல் கம்பெனிகளுக்கு சாப்ட்வேர் மற்றும் கண்டென்ட் தயாரித்து கொடுக்கிறது. உலகின் பெரிய கம்பெனிகள் எல்லாம் இவர்களின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். ஜனவரி 24ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிவடைகிறது; விலை ரூ.425 முதல் 450 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரிசல்ட் கார்னர்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சென்ற வருடம் இதே காலாண்டை விட 26 சதவீதம் அதிக லாபத்தைக் கொடுத்துள்ளது. இருந்தாலும், அந்தக் கம்பெனியின் பங்கு விலைகள் சந்தையில் குறைந்து ரூபாய் 2,800 அளவிற்கு வந்தது. முதலீட்டாளர்கள் இன்னும் அதிக லாபம் எதிர்பார்த்திருப்பார்களோ என்னவோ? இல்லை, மறுபடி பங்கு பிரிப்பு, போனஸ் போன்ற எதிர்பார்ப்போ என்னவோ? இந்த கம்பெனி 22 துணை நிறுவனங்களை தற்போது தன்னகத்தே கொண்டுள்ளது. அனைத்தும் நல்ல துறைகளில் உள்ள கம்பெனிகள். அதாவது, ரீடெய்ல் போன்றவை. ஆதலால், இந்த கம்பெனிகள் லிஸ்ட் செய்யப்படும் போது மதிப்பு கூடும் வாய்ப்பு உள்ளது. ரிலையன்ஸ் எனர்ஜி லாபம் கூடுதலாக கொடுத்திருந்தாலும், அது வேறு வகையில் வந்த லாபங்களை அதிகம் காட்டியுள்ளது. ஆதலால், அந்த பங்கின் விலை, ரிசல்ட்டுக்கு பிறகு இன்னும் குறைந்தது. டி.சி.எஸ்., கம்பெனியின் ரிசல்ட் நன்றாகத் தான் இருந்தது. இருந்தாலும், சந்தையில் எதிர்பார்ப்புகள் அதிகமாகி விட்டது. ரூபாய் 1,300 அளவு சென்ற அந்த கம்பெனியின் பங்குகள், தற்போது 920 ரூபாய் அளவிற்கு வந்து விட்டது. சாப்ட்வேர் மோகம் குறைந்து விட்டது. காரணம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு இன்னும் கூடலாம் என்ற எண்ணங்கள் தான். என்ன பங்குகள் வாங்கலாம்?:சந்தை தற்போது இருக்கும் நிலைமையில் என்.டி.பி.சி., பவர்கிரிட் ஆகியவை வாங்கத் தகுந்த பங்குகள். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் ரூபாய் 2,800 அளவில் கிடைக்கிறது. அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: பணவீக்கம் 3.79 சதவீதம் அளவில் உள்ளது. இது சென்ற வாரத்தை விட அதிகம். பெரிய அளவில் பணம் புதிய வெளியீடுகளில் முடக்கப்பட்டுள்ளதால், மறுபடி சந்தை சிறிது சிறிதாக மேலே வர இன்னும் 20 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். அதாவது, ரிலையன்ஸ் பவர் லிஸ்டிங் ஆகும் சமயம் தான் மறுபடி சந்தைக்கு முதலீட்டாளர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.நல்ல பல காலாண்டு முடிவுகள் வந்தும், சந்தை இந்த வாரம் 19,000க்கும் கீழே சென்றது. யாருமே நினைத்திருக்க மாட்டார்கள் இவ்வளவு கீழே செல்லும் என்று; அது தான் பங்குச் சந்தை. நன்றி: சேதுராமன் சாத்தப்பன் / தினமலர் Disclaimer :www.dailyindiansharemarket.blogspot.com an independent publisher of Trading and Investment advice provided for the education of traders and investors.The newsletter is an information service only..Recommendations, opinions or suggestions are given with the understanding that readers acting on this information assume all risks involved.The information provided herein is not to be construed as an offer to buy or sell securities of any kind.We do not assume any responsibility or liability resulting from the use of such information, judgements and opinions for Trading or Iinvestment purposes. |
posted by சுதாகர் at 1/20/2008 10:01:00 AM
Excllent Job on share market and tips.. Great..
Keep it up.
Surya
Chennai
butterflysurya@gmail.com
நல்ல அலசல்
<==
ரிலையன்ஸ் எனர்ஜி லாபம் கூடுதலாக கொடுத்திருந்தாலும், அது வேறு வகையில் வந்த லாபங்களை அதிகம் ==>
ரிலையன்ஸ் மட்டும் என்னவாம்? அவங்களும் ஆர்பிஎல்-லின் பங்குகளை விற்று ரூ.4000 கோடி லாபமீட்டினார்களே.